சென்னையில் மாடி பேருந்துகள் என அழைக்கப்படும் இரட்டை அடுக்கு பேருந்துகளின் சோதனை ஓட்டம் நடந்து முடிந்த நிலையில் இவை எங்கெல்லாம் இயக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
1990 களில் சென்னையில் பேருந்துகளில் பயணிக்கும், கல்லூரிகளுக்கும் சென்றவர்களுக்கு நினைவிருக்கும் மாடி பேருந்துகளை! இதை டபுள் டக்கர் பேருந்து என்று அழைப்போம். தமிழக போக்குவரத்து கழகம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து 1997 ஆம் ஆண்டு மாடி பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இது சென்னை மக்களிடையே மிகவும் பிரபலம். இதை 1990களில் வெளியான சினிமாக்களில் கூட பார்த்திருக்கலாம். இந்த டபுள் டக்கர் பஸ்ஸில் குறைந்த செலவில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். இதன் மூலம் போக்குவரத்து துறைக்கு அதிக லாபம் கிடைத்தது.
இந்த பேருந்தில் பெரும்பாலும் மாடியில் போய் அமரவே விரும்புவர், அப்போதுதான் பெரிய கட்டடங்களின் அழகை கண்டு ரசிக்க முடியும். கீழே உள்ள இருக்கைகள் பெரும்பாலும் காற்று வாங்கும். இல்லாவிட்டால் மேலே ஃபுல்லாகிவிட்டால் கீழே வந்து அமருவர். இத்தனை கம்பீரமான பேருந்துகளை 40 முதல 50 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க முடியும். அதைவிட வேகம் கூட்டினால் பஸ் கவிழ்ந்துவிடும். 2000களில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால் அந்த பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து 2008ஆம் ஆண்டு சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகளின் இயக்கத்தை போக்குவரத்து துறை நிறுத்திவிட்டது. இந்த நிலையில்தான் சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகளின் சேவை கொண்டு வரப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார். சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இடையே இந்த பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த டபுள் டக்கர் பேருந்தை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் நடந்தது.