

புதுடெல்லி: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது என்பது நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வானார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த ரிட் மனுக்களை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அதிகப்படியான பெரும்பான்மையின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.சுரேன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக ஒரு புதிய மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
மேற்கண்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, புருஷேந்திர குமார் கவுரவ்,”இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது, அக்கட்சியில் உள்ள சட்ட விதிகளை மாற்றியமைத்ததை ஒப்புக்கொண்டது ஆகியவை குறித்து எதிர்மனுதாரர்களான இந்திய தலைமை தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக கட்சி ஆகியோர் 6 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என கடந்த மே 3ம் தேதி நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில் மனுவாக தாக்கல் செய்துள்ளது. அதில்,\\”அதிமுக உட்கட்சி தேர்தல் மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்குகளில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இடையிலான வழக்குகளில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புகள் வந்ததால் தான் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து ஆணையத்தின் தரப்பில் இத்தகைய இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது, இந்த விவகாரத்தில் எதிர்வரும் காலத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டதாகும் என தெரிவித்துள்ளது. இதில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது நீதிமன்றங்களில் இருக்கும் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.