சென்னை: நாட்டின் 77வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார். போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், சமூக சேவகர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் 77வது சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடியினை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக ேநற்று காலை 9 மணிக்கு ஏற்றி வைத்தார். தமிழ்நாட்டில், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைப்பிரிவு, கேரளா காவல் படைப்பிரிவு, ஆண்கள் கமாண்டோ படைப்பிரிவு, சென்னை பெருநகர காவல் பெண்கள் படைப்பிரிவு மற்றும் குதிரை படைப்பிரிவு ஆகியோர் நடத்திய அணி வகுப்பு மரியாதையை திறந்த வெளி ஜீப்பில் பயணித்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். 

அவருக்கு ராணுவம், விமானப்படை, கப்பல்படை உள்பட பல்ேவறு துறைகளின் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார். இதன் பிறகு, காலை 9.05 மணிக்கு தனது சுதந்திர தின உரையை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 9.35 மணிக்கு பேசி முடித்தார். இதனையடுத்து, 2023ம் ஆண்டிற்கான ‘‘தகைசால் தமிழர் விருது’’ கி.வீரமணிக்கும், ‘‘டாக்டர் ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம் விருது’’ முனைவர் வசந்தா கந்தசாமிக்கும், ‘‘துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது’’ முத்தமிழ் செல்விக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

 
அதேபோல, முதல்வரின் காலை உணவு திட்டம் மற்றும் கண்காணிப்பு செல்லிட செயலிக்கான விருதினை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை சார்பில் ரமண சரஸ்வதிக்கும், ஆதரவற்ற நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்ததற்காக மருத்துவர் தேரணி ராஜனுக்கும், பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கும் முதல்வரின் நல் ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவராக சென்னையை சேர்ந்த மருத்துவர் ஜெயக்குமார் மற்றும் கன்னியாகுமரி சாந்தி நிலையம் நிறுவனத்துக்கும், கோவையை சேர்ந்த ரத்தன் வித்யாகருக்கும், மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்திய மதுரை டெடி எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கும், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கும் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

அதேபோல, மகளிர் நலனுக்காக பணியாற்றிய கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒளி நிறுவனத்துக்கும், சிறந்த சமூக சேவகர் விருது கோவையை சேர்ந்த ஸ்டான்லி பீட்டருக்கும் வழங்கப்பட்டன. இதனையடுத்து, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வரின் விருதுகளின் படி, சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலமாக 9வது மண்டலம் முதல் பரிசையும், 5வது மண்டலம் இரண்டாவது பரிசையும் வென்றது. மேலும், சிறந்த மாநகராட்சியாக முதல் பரிசு திருச்சிக்கும், 2வது பரிசு தாம்பரம் மாநகராட்சிக்கும் வழங்கப்பட்டது. அதேபோல நகராட்சிகளில் ராமேஸ்வரம் முதல் பரிசையும், திருத்துறைபூண்டி 2ம் பரிசையும், மன்னார்குடி 3ம் பரிசையும் பெற்றது. பேரூராட்சிகளில் முதல் பரிசு விக்கிரவாண்டி,2ம் பரிசு ஆலங்குடி, 3ம் பரிசு வீரக்கல் புதூர் ஆகிய பேரூராட்சிகளுக்குமுதல்வர் வழங்கினார். 

அதேபோல இந்தாண்டு முதல் முறையாக போதை பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழ்நாடு முதல்வர் காவல் பதக்கம் முன்னாள் மதுரை தெற்கு மண்டல காவல்துறை தலைவராக இருந்த ஆஸ்ரா கர்க், கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தேனி காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ், கோவை மத்திய குற்ற பிரிவு காவல் உதவி ஆணையர் குணசேகரன், நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் முருகன், நாமக்கல் முதல் நிலை காவலர் குமார் ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன் பிறகு, விருது பெற்றவர்கள் முதல்வருடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். மேலும் சுதந்திர தின விழாவினை கொண்டாடும் விதமாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதல்வர் இனிப்புகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram