அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரபிரதேச சாமியார் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இந்நிலையில், சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார் அறிவித்தார். வன்முறையை தூண்டும் வகையிலும், மக்களிடையே மத ரீதியாக பிளவை ஏற்படுத்தும் வகையிலும் பேசிய அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
சாமியாரை கைது செய்ய வலியுறுத்தி அவரது உருவப்படத்தை எரித்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநகர் மாவட்ட திமுக வழக்கறிஞரணி அமைப்பாளர் தேவசேனன்(42) என்பவர், மதுரை சைபர் கிரைம் போலீசாரிடம், நேற்று அளித்த புகார் மனுவில், பியூஷ்ராய் என்பவரின் டிவிட்டர் கணக்கில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராமச்சந்திர தாஸ் பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதன்பேரில் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இப்புகாரின்பேரில், மதுரை சைபர் கிரைம் போலீசார், சாமியார் ராமச்சந்திர தாஸ் பரமஹன்ஸ் ஆச்சார்யா, டிவிட்டர் கணக்கு உரிமையாளர் பியூஸ்ராய் ஆகியோர் மீது, இந்திய தண்டனை சட்டம் 153 (கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டுமென்றே செயல்படுதல்), 153ஏ(1)(ஏ) ( ஒற்றுமைக்கு குந்தகமான செயல்களை செய்தலும்), 504(உட்கருத்துடன் அமைதி இன்மையை வேண்டுமென்றே நிந்தித்தல்), 505(1)(பி) (அச்சத்தை ஏற்படுத்துவது), 505(2) (பகை, வெறுப்பு, தீய எண்ணங்களை உருவாக்குதல்) மற்றும் 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
பாஜ ஐடி தலைவர் மீதும் போலீஸ் வழக்கு பதிவு
பாஜ அகில இந்திய தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மாளவியா கடந்த 2ம் தேதி டிவிட்டரில் ஒரு பதிவு செய்திருந்தார். அதில், ‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை திரித்து சனாதன தர்மத்தை பின்பற்றி வரும் 80 சதவீதம் மக்களின் இன படுகொலைக்கு அழைப்பு விடுத்துள்ளார்’ என்று கூறியிருந்தார். இதனால், பொய் செய்தியை பரப்பிய அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி, மதுரை தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில் திருச்சி, மதுரை மாநகர காவல் ஆணையர்களிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில் அமித் மாளவியா மீது சட்டப்பிரிவுகள் 153 (கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டுமென்றே செயல்படுதல்), 153 (A) (வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகையை வளர்தலும், ஒற்றுமைக்கு குந்தகமான செய்கைகளை செய்தலும்), 504 (உட்கருத்துடன் அமைதியின்மையை வேண்டுமென்றே நிந்தித்தல்), 505 (1) (b) (பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து திருச்சி மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.