அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் டைம்ஸ் நவ் இடிஜி சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் எனவும், 26 கட்சிகளின் ‛‛இந்தியா” கூட்டணி பின்னடைவை சந்திக்கும் எனவும் பரபரப்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.
அதேவேளையில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, ஆம்ஆத்மி, திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ எனும் கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இதனால் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் நாடாளுமன்ற அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இத்தகைய சூழலில் நான் இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற வகையில் டைம்ஸ் நவம் இடிஜி (Times Now ETG) சார்பில் இந்தியாவில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி மீண்டும் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவே ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நேருவுக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்பார்கள் எனவும் அந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
கருத்து கணிப்பின்படி ஹிந்தி பேசும் மக்கள் வசிக்கும் பகுதியில் பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தேர்தல் நடந்தால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 296 முதல் 326 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.