சென்னை : அதிமுக மதுரை மாநாட்டிற்கு ஆட்களை அழைத்து வராத மாவட்ட செயலாளர்களுக்கும், முறையாக வழிநடத்தாமல் இருந்த மாநாட்டு குழுவினருக்கும் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கடுமையான எச்சரிக்கை விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, ராயப்பேட்டை எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, தனபால், ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன் மற்றும் மதுரை மாநாட்டு குழுவினர் பங்கேற்றனர். 

பின்னர் கூட்டத்தில், மதுரை மாநாட்டு தீர்மானங்களை விளக்கும் விதமாக பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்தும், அதேபோல, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற விவகாரத்தை ஒன்றிய அரசு தற்போது கையில் எடுத்துள்ளதை வரவேற்பதாகவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வியூகங்கள் என்ன என்பது குறித்தும், அதிமுகவை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் வண்ணம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு இரண்டு மாவட்டங்கள் என 100-ல் இருந்து அதற்கு மேற்பட்ட மாவட்ட பதவிகளை உயர்த்தி தேர்தலில் போட்டியிடுவதற்கான திட்டங்களும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதன்படி, தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையில் பூத் கமிட்டிகளை பலப்படுத்தி சுறுசுறுப்பாக செயல்படும் நிர்வாகிகளை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் தெரிவித்து உள்ளதாகவும், 1000 வாக்காளர்களுக்கு 25 பேர் கொண்ட கமிட்டி என்கிற அடிப்படையில் திட்டமிடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவதற்கான கடினமான உழைப்பை அனைவரும் செலுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூட்டத்தின் வாயிலாக நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளன. அதேபோல, 13 மாவட்ட செயலாளர்களை மாற்றுவதற்கான முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சென்னையில் மட்டும் 4 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மாநாட்டிற்கென அமைக்கப்பட்ட குழுவினரின் சரியான திட்டமிடல் இல்லாமல் உணவுகளை வீண் அடித்தது, மாநாட்டிற்கு வந்தவர்களை முறையாக கவனிக்கவில்லை என குற்றச்சாட்டுகள் இபிஎஸ் காதுகளுக்கு ஏற்கனவே சென்றிருந்த நிலையில் இதுகுறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாநாட்டு குழுவினரிடம் கேட்டு கடுமையாக கோபமடைந்துள்ளாராம். அதேபோல, மாநாட்டிற்கான ஆட்களை அழைத்துவர மாவட்ட செயலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ‘அசைன்மென்ட்’ காற்றில் பறக்கவிட்ட காகிதம் போல விட்டுவிட்டதால் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் இல்லாததையும் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி மேலும் அப்செட் ஆகியதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. இதன் காரணமாக தான் சென்னை உட்பட 13 மாவட்ட செயலாளர்களை மாற்றும் முடிவில் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram