மதுரை: மதுரையில் அதிமுக மாநாட்டால் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக நான்கு அணிகளாக உடைந்தது. பெரும்பான்மை நிர்வாகிகள், தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்ததுடன், அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளும் அவருக்கு சாதகமாக அமைந்தன. இந்த சூழ்நிலையில் தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றியது. இதனால் ஓபிஎஸ் தனித்து விடப்பட்டார். இதையடுத்து அரசியலில் டிடிவி.தினகரனுடன் இணைந்து திருச்சியில் கடந்த மாதம் மாநாடு நடத்தினார்.
இந்நிலையில், அவருக்கு போட்டியாக எடப்பாடி அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டை மதுரை அருகே வலையங்குளத்தில் நேற்று நடத்தினார். இதற்காக ரயில், பஸ், வேன், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அக்கட்சித் தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர். எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 8.45 மணியளவில் ஊர்வலமாக மாநாட்டு பந்தலுக்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்டார். மாநாட்டு முகப்பில், கட்சி துவங்கி 51 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயர கம்பத்தில் காலை 8.50 மணிக்கு அதிமுக கொடியேற்றினார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து ஒரு டன் அளவிற்கான ரோஜா பூக்கள் மும்முறை தூவப்பட்டன.
தொடர்ந்து கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சென்டை மேளம் முழங்க, நடனக் குதிரையுடன் தொண்டர்கள் வரவேற்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி மேடையில் ஒயிலாட்டம் ஆடினார். விதிமுறைகளை மீறி நகரில் பேனர், பிளக்ஸ்கள் பெருமளவில் வைக்கப்பட்டிருந்தன. மாநாட்டில் மாலை 6.05 மணிக்கு பேச்சை துவக்கிய எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக மிகப்பெரிய கட்சி. எம்ஜிஆர் 1972ல் அதிமுகவை தோற்றுவித்தார். இன்று பொன்விழா கொண்டாடி 51ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 1989ல் அதிமுக இரண்டாக பிரிந்தது, ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
எம்பி தேர்தலில், சட்டமன்ற தேர்தலில் வென்று, அமைச்சராக உங்கள் ஆதரவால் முதலமைச்சராக ஆனேன். மதுரை மண், ராசியான மண். தொட்டது துலங்கும். முதன்முதலாக பொதுச் செயலாளராகி, எழுச்சி மாநாடு இங்கு துவக்கியுள்ளோம். அதிமுக ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. இம்மாநாடு சாதனை படைத்திருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில், உலகப் பொதுமறை திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவது. தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழை பயிற்றுமொழியாக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவது. அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக தமிழை கொண்டு வர வலியுறுத்துவது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை புதுச்சேரி மாநிலம் என்று அறிவிக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவது, தமிழ்நாட்டிற்குரிய கச்சத்தீவை மீட்டெடுக்க வலியுறுத்துவது, மணிப்பூர் மக்கள் பிரச்னைக்கு உரிய தீர்வு வழங்கி அமைதி ஏற்படுத்த மணிப்பூர் மாநில அரசையும், ஒன்றிய அரசையும் கேட்டுக்கொள்வது, 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிப்பது, அதிமுகவிலிருந்து துரோகிகளை இனம்கண்டு களையெடுத்து கட்சியை காப்பாற்றிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்பது உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஓபிஎஸ் போன்றோரை குறிப்பிட்டே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கட்சியினர் தெரிவித்தனர். முன்னதாக அதிமுக மாநாடுக்கு எடப்பாடி வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த பத்து நாட்களாக தென் மாவட்டங்களில் போஸ்டர்கள் ஓட்டுவது, ஆர்ப்பாட்டது நடத்துவது சம்பவங்கள் நடந்தது. ஆனால், நேற்று மாநாடு நடந்த பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருந்ததால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.