சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப் பாதை 4வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய சுற்றுவட்டப் பாதையின் உயரம் 256கி.மீ. * 1,21, 973 கி.மீ. என அதிகரிக்கப்பட்டுள்ளது. செப்.19ல் புவியின் ஈர்ப்பு விசையில் இருந்து லாக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி விண்கலம் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2ம் தேதி பி.எஸ்.எல்.சி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது. பின்னர், புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை தொடங்கிய விண்கலத்தின் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் இன்று 4வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அதிகாலை 2.15 மணியளவில் விண்கலத்தின் உயரம் 4வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆதித்யா விண்கலம் பூமியை குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 973 கிலோ மீட்டர் தூரத்திலும் சுற்றி வரும். சுற்று வட்டப்பாதை உயர்வு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 4வது முறையாக சுற்று வட்டப்பாதை உயரம் இன்று அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 5வது முறை சுற்றுவட்டப்பாதை உயர்வு நடவடிக்கை வரும் 19ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.