
சென்னை: தமிழக முதல்வரின் அறிவிப்பையடுத்து, சென்னையில் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 2 ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். முன்னதாக போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர். சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கடந்த 10 நாட்களாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உண்ணா விரதம் இருந்து வந்தனர். அவர்களை தொடர்ந்து, கடந்த 7 நாட்களாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களும் இரவு பகலாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் டிபிஐ வளாகத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர்.
அதனால், ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வந்தனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரடியாக இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து கேட்டார். முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக கூறினார். ஆனாலும் இடைநிலை ஆசிரியர்கள் அதை ஏற்காமல் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை போலவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுடன், பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும், பணி நியமனத்துக்காக நடத்தப்படும் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியத்திலாவது பணி நியமனம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர். அப்போது, தகுதித் தேர்வு மற்றும் ஆசிரியர் நியமனம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதற்கு பிறகு இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று இயக்குநர் தெரிவித்தார். அவரது பதிலில் திருப்தி அடையாத அவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வி வளாகத்தில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். கல்வித்துறையை சேர்ந்தவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளுமே தோல்வியில் முடிந்ததால், மேற்கண்ட சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் டிபிஐ வளாகமே ஆசிரியர்களால் நிரம்பி வழிந்தது.
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து சங்கங்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்ல கேட்டுக் கொண்டனர். ஆனால் யாரும் செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்தார். பிறகு மாலை 6 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சில அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
அப்போது, சமவேலைக்கு சமஊதியம் கேட்கும் கோரிக்கையின் அடிப்படையில், 6வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, பல்வேறு துறைகளில் 1.6.2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று எண்ணும் எழுத்து திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடப்பதாலும், வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு மேற்கண்ட பயிற்சியில் சேருமாறும், பயிற்சியை முடித்து பள்ளிக்கு திரும்ப வேண்டும்.
மேலும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2500 ஊதியத்தை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ரூ.10 லட்சம் வரை மருத்துவ காப்பீடு அறிமுகம் செய்யப்படும். அதற்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 என்றும், இதர பிரிவினருக்கு 58 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. பல்வேறு வழக்குகள் ஆசிரியர்கள் தெரிவு சார்ந்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.