சென்னை: சென்னையில் நடந்த பாஜ கூட்டத்தில் அதிமுக ஊழல்கள் குறித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலுக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவு எடுக்கலாம் என்று நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜ மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், மூத்த தலைவர்கள் பொன்ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, சக்ரவர்த்தி, கே.பி.ராமலிங்கம், பொது செயலாளர்கள் கருப்பு முருகானந்தம் ஏ.பி.முருகானந்தம், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்பட மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், அணி தலைவர், மாவட்ட பார்வையாளர்கள் என 221 பேர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தை அமைப்பு பொது செயலாளர் செயலாளர் கேசவ விநாயகம் தொடங்கி வைத்தார். சிறிது மணி நேரத்திற்கு பிறகு கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாஜவின் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் முழுநேர பணியாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் அதிமுக கூட்டணி முறிவு குறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. 

அப்போது அதிமுக தலைவர்களின் ஊழல்கள் குறித்து எதுவும் பேசக் கூடாது. 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி குறித்து முடிவு எடுக்கலாம். அப்போது தேவைப்பட்டால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டியது வரும். கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், ‘கூட்டணியை பற்றி கவலைப்படாதீர்கள். தேர்தலில் மக்கள் நம்மை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு ஆதரவு தருவார்கள். சர்க்கஸில் ஒருவர் உயிரை பணயம் வைத்து ஒரு கம்பியில் இருந்து அடுத்த கம்பிக்கு தாவி பிடித்து ஆடுகிறார். அதுபோல நாமும் கூட்டணி விவகாரத்தில் ரிஸ்க் எடுப்போம். மக்கள் நமக்கு உரிய அங்கீகாரம் தருவார்கள். 

தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க செல்லும் போது பெண்களை அழைத்துச் சென்று ஓட்டு கேளுங்கள். பெண்கள் கேட்டாள் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள். ஒவ்வொரு ஊரிலும் பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகிறது. எனவே உள்ளூர் பிரச்னைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்துங்கள். நடை பயணத்தின் போது மத்திய அரசின் திட்டங்களை பயனடைந்த பயனாளிகளை அழைத்து வந்து மேடையில் பேச வையுங்கள். இனி வருகிற 7 மாதங்களும் மிகவும் முக்கியமான காலம் எனவே ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து தேர்தல் பணியாற்றுங்கள்’’ என்று பேசினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram