கோவை: கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடுவதாக மநீம கூட்டத்தில் கமல்ஹாசன் சூசகமாக தெரிவித்து உள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: எங்களுக்கு சனாதனம் வார்த்தை தெரிந்ததே பெரியாரால்தான். சாமி இல்லை என சொல்வது பெரியாரின் வேலை அல்ல. 

சமுதாயத்திற்காக கடைசி வரை வாழ்ந்தவர் பெரியார். எந்த கட்சியும் பெரியாரை சொந்தம் கொண்டாட முடியாது. பெரியாரை தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும். அதில் ஒருவன் நான். கேள்வியும் கேட்க வேண்டும் என கற்றுக்கொடுத்தவர் அவர். 2024 நாடாளுமன்ற தேர்தல் நியாயமாக நடக்கும் என்ற தேதிக்கு கொஞ்சம் நேரம் இருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு அவர்களின் சவுகரியத்திற்கு ஏற்ப சீக்கிரம் தேர்தலை கொண்டு வருவார்கள். கடந்த தேர்தலில் ஜெயித்து இருந்தால் எம்எல்ஏ இல்லையென்றாலும் நெஞ்சை நிமிர்த்தி நடந்தேன். என் முகத்தில் அப்போது சோகம் இல்லை. 

அத்தனை மக்கள் வாக்களித்தும் நம்மை ஏமாற்றியது யார்? மீண்டும் நாம் சூழ்ச்சிக்கு ஆளாகக்கூடாது. மக்கள் நீதி மய்யத்தை பொருத்தவரை எனக்கு வெவ்வேறு இடங்களில் இருந்து அழைப்பு வருகிறது. தேர்தலில் நிற்க கோவைக்கு வாருங்கள். நாம் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என தொண்டர்கள் சொல்கிறார்கள். சென்னைக்கு வாருங்கள் என அழைக்கிறார்கள். இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்கு நான் மன்னிப்புதான் கேட்க வேண்டும். தேர்தலில் நீங்கள் வேலை செய்ய வேண்டும். கோவையில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தமாக அனைத்து பூத்திலும் வேலை செய்ய 40 ஆயிரம் பேர் வேண்டும். 

கோவைக்கு வாங்க என கூப்பிடுவது மட்டும் போதாது. வேலை செய்ய 40 ஆயிரம் பேர் ரெடி பண்ண வேண்டும். தலைவனால் இயலாததை தொண்டனிடம் சொல்லக்கூடாது. எனக்கு மூக்கு உடைந்தாலும் பரவாயில்லை. மருந்து போட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்பேன். உண்மை தோற்றிருக்கக்கூடாது என ஒருவர் என்னிடம் கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் நீங்கள் வேலை செய்ய தயாராக வேண்டும். நல்ல தலைமை தமிழ்நாடு முழுவதற்கும் வர வேண்டும். நமது அஜாக்கிரதையினால் நாம் பலியாகி விடக்கூடாது. ஒருவர் தேரை இழுக்க முடியாது. அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டும். நேர்மைக்கு எல்லா இடங்களிலும் மரியாதை உள்ளது. 

அவர்களே நம்மை அழைப்பார்கள். அழைப்பிதழ் அச்சடிக்க ஆரம்பித்து விட்டார்கள். முதியவர்கள் புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும். என்னை தலைவன் என நம்புபவர்கள் இருக்கிறார்கள். கட்சிக்கு புதிதாக வருபவர்களுக்கு நீங்கள் வேலியாக இருக்கக்கூடாது. ஏணியாக இருக்க வேண்டும். இளைஞர்கள் ஒதுங்கி இருக்கக்கூடாது. கட்சியில் பதவி நிரந்தரம் இல்லை. என் உறவு நிரந்தரம். வேலை செய்தால் தான் பதவி நிரந்தரம். அரசியல் என்றால் சூதுவாது இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. அதன் காலை பிடுங்கிவிட்டு வெளியில் வர வேண்டும். தொப்புளை சுற்றி ஊசி போட்டு கொள்ள வேண்டும். ஊசி போடும் அந்த டாக்டர் தான் நான். வெறி பிடிக்காமல் இருக்க அன்பு ஒன்றுதான் மருந்து. அன்பு ஒன்றுதான் எனக்கு தெரிந்த மதம். அதைவிட பெரிய மதம் மனிதம். எனக்கு பயம் வரும்போது மனிதர்களை பற்றி நினைத்து கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram