சென்னை: மதுபான கடத்தல் குறித்து விசாரித்தபோது துப்பாக்கி விற்ற விவகாரத்தில் காங்கிரஸ் பிரமுகர் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளது. இவர்கள் படுகொலை செய்யப்பட்ட பாஜ பிரமுகருக்கு துப்பாக்கி சப்ளை செய்ததும் அம்பலமாகியுள்ளது. சென்னை ராஜமங்கலம் பகுதியில் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படும் மதுபானங்கள் விற்கப்படுவதாக கொளத்தூர் உதவி கமிஷனர் சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கிடைத்த ரகசிய தகவலின்படி புழல் அண்ணா மெமோரியல் நகர் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் (31) என்பவர் வீட்டில் தனிப்படை போலீசார் கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவர், புழல் காவாங்கரை மற்றும் விநாயகபுரம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இதையடுத்து யோகேஷ், மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவரான புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த சையத் சர்ப்ராஸ் நிவாஸ் (41) என்பவரின் உதவியை நாடியுள்ளார். இவர் மீது ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதாகவும், 11 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து, சையத் சர்ப்ராஸ், யோகேஷுக்கு உதவி செய்வதாகக் கூறி யோகேஷை தனிப்படை போலீசாரிடம் அனுப்பி வைத்துள்ளார். சாதாரண விசாரணைதான், நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி யோகேஷை அனுப்பியுள்ளார்.
பின்னர், தனிப்படை போலீசார் யோகேஷிடம் விசாரணை நடத்தி, அவரது செல்போனை ஆய்வு செய்தபோது யோகேஷ் துப்பாக்கியுடன் உள்ள போட்டோ கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், துப்பாக்கி உங்களிடம் எப்படி வந்தது என துருவித்துருவி விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. யோகேஷ் 2 இடங்களில் ஓட்டல் வைத்து நடத்தி வருவதால் அவரது ஓட்டலுக்கு வழக்கமாக கறி சப்ளை செய்யும் புழல் காவாங்கரை பகுதியைச் சேர்ந்த ரகமத்துல்லா (31) என்பவர் யோகேஷூக்கு பழக்கமாகியுள்ளார். அவர் மூலமாகத்தான் சையத் சர்ப்ராஸ் நவாஸ், யோகேஷூக்கு நெருக்கமானார்.
அப்போது சையத் சர்ப்ராஸ் நவாசுக்கு துப்பாக்கி தேவைப்பட்டுள்ளது. மேலும் இவர் மீது நிறைய வழக்குகள் உள்ளதால், அவருக்கு வேண்டப்பட்டவர்களும் இவரிடம் துப்பாக்கி வேண்டும் என கேட்டுள்ளனர். இதனால் சையத் சர்ப்ராஸ் நவாஸ் யோகேஷிடம் துப்பாக்கி வாங்கித் தரும்படி கூறியுள்ளார். தனக்கு தெரிந்த வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த முத்தாகிர் (25) என்பவர் தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளதாகவும், அங்கு சென்றால் மலிவான விலையில் துப்பாக்கி வாங்கலாம் எனவும் யோகஷே் கூறியுள்ளார்.
இதையடுத்து, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு யோகேஷ் மற்றும் சையத் சர்ப்ராஸ் நவாஸ் ஆகிய இருவரும் உத்தரபிரதேச மாநிலத்துக்கு சென்றுள்ளனர். அங்கு முத்தாகிரை சந்தித்து துப்பாக்கி வாங்க ஏற்பாடுகள் நடந்த ஏற்பாட்டில் திருப்தி இல்லையாம். இதனால் இருவரும் சென்னை திரும்பினர். அப்போது டெல்லியில் அருண் சவுத்ரி, லோகேஷ் சவுத்ரி ஆகிய இருவர் யோகேஷூக்கு பழக்கமாகியுள்ளனர். அவர்களிடம் தொலைபேசி எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு யோகேஷ் மற்றும் சையத் சர்ப்ராஸ் நவாஸ் ஆகிய இருவரும் சென்னை திரும்பி விட்டனர்.
அதன் பின்பு யோகேஷ் மட்டும் தனியாக சென்று டெல்லியில் அருண் சவுத்ரி, லோகேஷ் சவுத்திரி மூலமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களை வாங்கி வந்துள்ளார். அதனை சையத் சர்ப்ராஸ் நவாஸிடம் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு அவர் விற்றுள்ளார். அவர் அந்த துப்பாக்கியை கொளத்தூர் பூம்புகார் நகரைச் சேர்ந்த சையத் அபுதாஹிர் (42) என்பவர் மூலமாக ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த பாஜ பிரமுகர் சங்கர் என்பவருக்கு விற்றுள்ளார். இதில் சங்கரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நசரத்பேட்டையில் வைத்து ஒரு கும்பல் வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்தது.