சென்னை: காவல்துறை எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம், சென்னை, ஆவடி, தாம்பரம் என 26 வழித்தடங்கள் மூலம் 2,148 சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 4 இடங்களில் கரைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18ம் தேதி கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லையில் இந்த ஆண்டு 1,519 சிலைகளும், தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 425 சிலைகள், ஆவடி மாநகர காவல் எல்லையில் 204 சிலைகள் உட்பட மொத்தம் 2,148 சிலைகளை இந்து அமைப்புகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர். 6 நாட்கள் வழிபாடு முடிந்து 2 நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. குறிப்பாக, பட்டினப்பாக்கம், பல்கலை நகர், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்றம் என 4 இடங்கள் மட்டுமே மாநகர காவல் துறை அனுமதி வழங்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் எல்லையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை 17 வழித்தடங்களிலும், தாம்பரம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை 4 வழித்தடங்கள், ஆவடி பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை 5 வழித்தடங்கள் என மொத்தம் 26 வழித்தடங்களில் மட்டும் ஊர்வலமாக கொண்டு வந்து அனுமதிக்கப்பட்ட 4 இடங்களில் சிலைகள் கரைக்கப்பட்டது. முதல் நாளான நேற்று முன்தினம் பாரதிய சிவசேனா அமைப்பினருக்கு சிலைகளை கரைக்க போலீசார் அனுமதி வழங்கினர். 2வது நாளாக நேற்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சிலைகள் கரைக்க போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.
இந்நிலையில், சென்னை மாநகர காவல் எல்லையில் ஜாம்பஜார் பகுதியில் உள்ள மசூதி வழியாக இந்து முன்னணி மாநில தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் அங்கு குவிக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் போலீசார், இந்து முன்னணியினரின் ஊர்வலத்தை மாற்று வழியில் அனுப்பி வைத்தனர். அதேபோல், சென்னை மாநகர பகுதிகளில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க், தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் தலைமையில் மொத்தம் 16,500 போலீசார் மற்றும் 2 ஆயிரம் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.