சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் ஆகியோருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். நீர்வளத்துறையில் பணியாற்றிய பொறியாளர் திலகம் மற்றும் முத்தையா ஆகியோர் வீடுகளில் இருந்து வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சி, வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் மணல் குவாரிகள் இயங்கி வருகிறது.
குறிப்பாக திருச்சி மற்றும் வேலூரில் இயங்கி வரும் மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்களாக பிரபல தொழிலதிபர்களான புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் ஆகியோர் உள்ளனர். மணல் ஒப்பந்த குவாரிகளில் வரும் வருமானத்தை சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்வதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை ஒரே நேரத்தில் நுற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், மணல் குவாரி அதிபர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியற்றிய ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை அதிகாரி முத்தையா ஆகியோருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் கிராமத்தில் உள்ள தொழிலதிபரான எஸ்.ராமச்சந்திரன் வீட்டிற்கு நேற்று காலை புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் பதிவு கொண்ட 3 வாகனங்களில் வந்த 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படைவீரர்களுடன் அதிரடி சோதனை நடத்தினர். புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள ராமச்சந்திரனுக்கு சொந்தமான அலுவலகம், ராமச்சந்திரனின் நண்பரான கந்தர்வக்கோட்டை அருகே உள்ள புனல்குளம் கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சண்முகம் (அதிமுக முன்னாள் எம்பி திருச்சி பா.குமாரின் உறவினர்) என்பவருக்கு சொந்தமான கிராவல் குவாரி, புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள முருகபாலா என்பவரது ஆர்கிடெக் அலுவலகம் என 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.