மாரகேச்: மொராக்கோ நிலநடுக்கத்தினால் பலி எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது. 2059 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான மொராக்கோவின் அட்லஸ் மலை பகுதியில் வெள்ளியன்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 என பதிவாகியிருந்த நிலநடுக்கத்தினால் மவுலே பிரேஹிம் என்ற கிராமத்தில் கடும் பேரழிவு ஏற்பட்டு வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகிவிட்டன. நிலநடுக்கத்தில் கிராமத்தை சேர்ந்த பலர் உயிரிழந்து விட்டனர். இதனால் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் சேறும் சகதியுமாக உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புராதன நகரமான மாரகேச்சிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மீட்பு படையினருடன் ராணுவத்தினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மாரகேச் அருகில் உள்ள மலை பகுதியில் பல கிராமங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சாலைகளில் பாறைகள் விழுந்துள்ளதால் மீட்பு பணி மேற்கொள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.மொராக்கோவின் அருகில் உள்ள ஐரோப்பிய நாடானா ஸ்பெயின் மீட்பு பணிகளில் உதவி அளிப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஸ்பெயின் வெளியுறவு துறை அமைச்சர் ஜோஸ் மனுவேல் அல்பாரேஸ் கூறுகையில்,‘‘நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான மொராக்கோ வெளியுறவு அமைச்சர் உதவி கேட்டுள்ளார். ஸ்பெயினுக்கும் மொராக்கோவுக்கும் இருக்கும் நட்பின் அடிப்படையில்,இந்த உதவி அளிக்கப்படுகிறது’’ என்றார். அந்த நாட்டின் உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று முன்தினம் வரை 2,012 பேர் பலியாகி விட்டனர். மாரகேச் மற்றும் அதன் அருகில் இருக்கும் மாகாணங்களில்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 2,059 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில், 1,404 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் ஏராளமானோர் பலியானதையடுத்து, அந்த நாட்டில் 3 நாள் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.