சென்னை: சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நீட் தேர்வால் 21 உயிர்களை நாம் பலி கொடுத்து இருக்கிறோம். இது தற்கொலை கிடையாது. இது கொலை. இந்த கொலையை செய்தது ஒன்றிய பாஜ அரசு. அந்த கொலைக்கு துணை நின்றது அதிமுக. ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எவ்வளவு திமிரு, எவ்வளவு கொழுப்பு. ஒரு கூட்டம் நடத்துகிறார். அதில், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களை எல்லாம் அழைத்து ஒரு கூட்டம். கிட்டத்தட்ட நீட்டுக்கு ஒரு கோச்சிங் கிளாஸ் நடத்துகிற மாதிரி நடத்துகிறார்.
அதில் வெற்றி பெற்ற ஒரு மாணவனின் தந்தை எழுந்து,‘‘என்னிடம் வசதி இருந்ததால் என் மகனை கோச்சிங்கிற்கு அனுப்பினேன். ஆனால், என்னை மாதிரி எத்தனை பேரால் கோச்சிங் சென்டருக்கு அனுப்ப முடியும் என்று தைரியமாக பேசினார். அதற்கு, நீட்டை நீக்க முடியாது என்கிறார் ஆளுநர்.இதை கூற நீங்கள் யார். திமுகவின் கடைக்கோடி தொண்டனை நிறுத்தினால் தேர்தலில், உங்களால் ஜெயிக்க முடியும் என்றால் மக்களை சந்தியுங்கள். ஜெயித்து விட்டு வாருங்கள். நீங்கள் சொல்வதை எல்லாம் நான் கேட்கிறேன். ஆளுநரிடம் கேள்வி கேட்ட அமாசியப்பனுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். அவரின் வேலைக்கு ஏதாவது பிரச்னை செய்தீர்கள் என்றால் நாங்கள் சும்மா விட மாட்டோம். தமிழ்நாட்டு மக்களை பற்றி உங்களுக்கு தெரியாது ஆளுநரே. வாக்குறுதியை நாங்கள் கொடுத்தாம்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முழு முயற்சியையும் தலைவர் எடுத்து கொண்டு வருகிறார். நீட்டுக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாவுக்கு அதிமுக உள்பட அனைவரும் ஆதரவு தெரிவித்து வாக்களித்தார்கள். வாக்களிக்காத அந்த 4 பேர் பாஜவினர். இப்போது அந்த சட்ட மசோதா ஜனாதிபதியிடம் இருக்கிறது. ஆனால், ஆளுநர் இங்கே இருந்து கொண்டு பேசி கொண்டு இருக்கிறார். சிலர் மருத்துவ படிப்பு தவிர வேறு படிப்பு இல்லை என்று சொல்கிறார்கள். அதை சொல்ல நீங்கள் யார். நீட்டை ஒழிக்கிறோமோ அன்றைக்குதான் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒரு விடியல். அதை திமுக கண்டிப்பாக செய்யும். இதுதான் ஆரம்பம்.
மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மாடு பிடிப்பதற்கே சண்டை போட்டோம். ஒரு மாணவர் உயிருக்கு சண்டை போட மாட்டோமா? மாணவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கி தருவார். அனிதா பொதுதேர்வில் எத்தனை மார்க்கு என்று தெரியுமா. அவர்கள் தற்கொலை செய்தது எல்லாம் நீட் தேர்வால். உங்கள் வீட்டில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் இப்படி சொல்வீர்கள்? உண்ணாவிரத போராட்டம் தேவையற்றது என்கிறார்கள். நான் சொல்றேன். தமிழ்நாட்டிற்கு பாஜ என்ற கட்சியை தேவையில்லாதது. இது தொடர்ந்து கொண்டே போனால் ஒன்றிய பாஜவையும், அதிமுகவையும் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
அதிமுகவுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். அதிமுக மாநாட்டில் ஒரு தீர்மானத்தை போடுங்கள். ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று. எடப்பாடி பழனிசாமியிடம் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கூட வர வேண்டாம். உங்கள் இளைஞர் அணி செயலாளரை அனுப்பி வையுங்கள். மாணவர் அணி செயலாளரை அனுப்பி வையுங்கள். நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து டெல்லிக்கு போவோம். டெல்லியில் பிரதமர் வீட்டு முன் உட்காருவோம். அப்படி நீட்டுக்கு விலக்கு கிடைத்தது என்றால் முழு பெருமையையும் நீங்கள் எடுத்து கொள்ளுங்கள். அதிமுகவால் தான் நீட் தேர்வு ரத்தானது என்று நான் ஏற்று கொள்கிறேன். நீங்கள் தயாரா?.
நீட் மசோதாவுக்கு நான் கையெழுத்து போட மாட்டேன் என்று ஆளுநர் கூறிக்கொண்டு இருக்கிறார். உண்மையாக நாம் கண்டனத்தை தெரிவித்து கொண்டிருக்கிறோம். இதுவரை ஆளுநருக்கு எதிராக அதிமுகவில் இருந்து யாராவது மூச்சாவது விட்டு இருக்கிறார்களா? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இரும்பு பெண்மணி என்று அவர்கள் கட்சியில் உள்ளவர்கள் சொல்வார்கள். அவரை தலைவராக ஏற்று கொண்டு இருக்கும் நீங்கள் பித்தளை மனிதராவது இருக்க வேண்டாமா?