

மணிப்பூர் பற்றி எரிகிறது, ஆனால், நாடாளுமன்றத்தில் நடுவே அமர்ந்துகொண்டு வெட்கமின்றி சிரித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி,
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி ‘இந்தியா’ கூட்டணி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கின. இதைத்தொடர்ந்து லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சி எம்.பிக்களால் கொண்டு வரப்பட்டது.
3 நாட்களாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று மாலை, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மக்களவையில் பிரதமர் மோடி பதிலளித்தார். தனது பதிலுரையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஒரு வார்த்தையும் பேசாததைக் கண்டித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். எனினும் பிரதமர் மோடி தொடர்ந்து பேசிய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.அவர்கள் வெளியேறிய பின்பு மணிப்பூர் பற்றிப் பேசினார் பிரதமர் மோடி.
இந்த நிலையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. அப்போது காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, மீண்டும் நாடாளுமன்றம் கூடிய நிலையில், எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மதியம் 12.30 மணி வரை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. மழைக்காலக் கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.