சென்னை: பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.3 கோடியில், தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தியாகி இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் மகள் சூரியசுந்தரிபிரபாராணி மற்றும் அவரது பேரன் சக்கரவர்த்தி ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இக்கோரிக்கையினை வலியுறுத்தினர்.
தியாகி இம்மானுவேல் சேகரனார் 1924ம் ஆண்டு அக்டோபர் 9ம்தேதி பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.