சென்னை: வருமானத்தை குறைத்து காணக்கு காட்டி பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக பிரபல செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என 10 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ததில் இரண்டு விதமான கணக்குகள் பராமரித்து வந்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அருகே கந்தன்சாவடியை தலைமையிடமாக கொண்டு ‘பிளக்ஸ்ட்ரானிக்ஸ் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பிரபல செல்போன் நிறுவனங்களுக்கு தேவையான உதரிபாகங்களை தயாரித்து வழங்கி வருகிறது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், உண்மையான வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்புஅதன் மூலம் பல கோடி ரூபாய் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு வரிஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேநேரம் கடந்த 2022-23 நிதி ஆண்டில் இந்த நிறுவனம் 2021-22 நிதியாண்டை காட்டிலும் குறைந்த வருமானத்தை வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பிரபல செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான ‘பிளக்ஸ்ட்ரானிக்ஸ் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திற்கு சொந்தமான கந்தன்சாவடியில் உள்ள தலைமை அலுவலகம், ஸ்ரீபெரும்புதூர், ஆவடி சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகள், பெருங்குடி என சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 10 இடங்கில் பெங்களூரில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.பெரும்புதூர், ஆவடி சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் யாரையும் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியே விடவில்லை.