வாழப்பாடி: அதிமுக-பாஜ பிரிவு என்பது உட்கட்சி தகராறுதான், ஒரு போன் கால் போதும், மோடி, அமித்ஷா பேசினால் மீண்டும் கூட்டணி வந்துவிடும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும் டிசம்பரில் திமுக இளைஞரணி மாநாடு நடக்கிறது. மாநாடு நடக்கவுள்ள இடத்தில், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். பின்னர், அவர் அளித்த பேட்டி: அதிமுக-பாஜ கூட்டணி பிரிவு என்பது, உட்கட்சி தகராறு போன்றதுதான். ஆரம்பத்தில் இருந்தே அதை காமெடியாகத்தான் பார்க்கிறேன். இருதரப்பினரிடையே மோதல் நடப்பது முதல் தடவை அல்ல. ஒரு போன் வந்தால், எல்லாம் முடிந்து விடும். மறுபடியும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கூப்பிட்டு பேசினால், மீண்டும் கூட்டணி வந்து விடும்.
அவர்கள் இணைந்து இருந்தாலும், பிரிந்து இருந்தாலும் திமுக அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. எங்களுடைய நோக்கம் மக்கள் சேவையாற்றுவதுதான். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான். திமுக கூட்டணி கடந்த 7, 8 வருடங்களாக இருக்கிறது. இது கொள்கை கூட்டணி என்பதால், தொடர்ந்து நீடிக்கிறது. அதை மிகுந்த சாமர்த்தியமாக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு செல்கிறார். எங்களுடைய வெற்றிக் கூட்டணி தொடரும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 4 பேர், யாருக்கும் தெரியாமல், குறுக்கு வழியில் இங்கிருந்து கொச்சிக்கு போய், பெங்களூரு போய் தலைமறைவாக டெல்லிக்கு சென்றனர். நேற்று கூட மூத்த தலைவர்கள் யாரும், பாஜ பற்றி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தியதாக கேள்விப்பட்டேன். இதிலிருந்து என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள். மக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள்.
சிஏஜி அறிக்கையில், ஒன்றிய பாஜ ஆட்சியின் 9 ஆண்டு கால ஒட்டுமொத்த ஊழலும் வெளியில் வந்து, எல்லோரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல வக்கில்லாமல்,வேறு எதை, எதையோ பொய் பிரசாரம் செய்து, திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். கண்டிப்பாக இந்த முறை பாஜ ஆட்சி அமைக்காது. காவிரி பிரச்னையில் எப்போதும் உரிமைகளை விட்டுத் தரமாட்டோம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உணர்வு, கொள்கை இருக்கும். நம்முடையதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என சொல்ல முடியாது. அதிமுக ஆட்சியில் மாநில உரிமைகள் அனைத்தும் விட்டுக் கொடுக்கப்பட்டது. அதைப் போல, திமுக எந்தக் காலத்திலும் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காது. இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.