புதுடெல்லி: ‘’வரும் 2047ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். அப்போது ஊழல், ஜாதி, மதவாதத்துக்கு இடமில்லை என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள பாரத் மணிமண்டபத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி கடந்த வாரம் தனது லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த 80 நிமிட சிறப்பு நேர்காணலில் கூறியதாவது: ஜி 20 நாடுகளின் பங்களிப்பு உலகின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதமும், சர்வதேச வர்த்தகத்தில் 75 சதவீதமும், உலக மக்கள் தொகையில் 65 சதவீதமும் உள்ளது.
ஒரு நாட்டினுடைய பொருளாதாரம், பிராந்தியம் என எதையும் பொருட்படுத்தாமல், அந்நாட்டின் குரலும் முக்கியமானது என்று கருத வேண்டும். இந்த அணுகுமுறைதான் உலக அளவில் இந்தியாவை வழிநடத்துகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாகக் கொண்ட உலகின் பார்வை, தற்போது மனிதனை மையமாகக் கொண்டதாக மாறி வருகிறது. இதற்கு வினையூக்கியாக இந்தியா செயல்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சமூக உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியை உலகமே கவனித்து வருகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு புதிய உலகளாவிய கொள்கை ஏற்பட்டதைப் போலவே, கொரோனாவுக்குப் பிறகு ஒரு புதிய கொள்கை உருவாகி வருகிறது. இது அங்கீகரிக்கப்பட வேண்டும். கொரோனா பாதிப்பின் போது, பொருளாதார சவால்களுக்கு மேலாக, மனிதகுலத்தை பாதிக்கும் பிற முக்கியமான சவால்களும் உள்ளன என்பதை உலகம் புரிந்துகொண்டது. ஒரு பெரிய சந்தையாக மட்டுமே பார்க்கப்பட்ட இந்தியா உலகளாவிய சவால்களுக்கான தீர்வுகளின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. இந்தியாவின் ஜி 20 தலைவர் பதவி மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகளில் நம்பிக்கை விதைகளை விதைத்துள்ளது.
இந்தியாவின் அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் என்ற தாரக மந்திரம் உலக நலனுக்கான வழிகாட்டும் கொள்கையாக விளங்க முடியும். 20 ஆம் நூற்றாண்டின் அணுகுமுறையை கொண்டு 21 ஆம் நூற்றாண்டில் உலகிற்கு சேவை செய்ய முடியாது. எனவே, ஐ.நா.வில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். நீண்ட காலமாக, இந்தியா 100 கோடிக்கும் அதிகமான பசியுள்ள வயிற்றைக் கொண்ட நாடாக கருதப்பட்டது. ஆனால் தற்போது, இந்தியா 100 கோடிக்கும் அதிகமான ஆர்வமுள்ள மனங்கள், 200 கோடிக்கும் அதிகமான திறமையான கைகள் மற்றும் லட்சக்கணக்கான இளைஞர்களைக் கொண்ட நாடாக பார்க்கப்படுகிறது.
அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்க 2047 வரையிலான காலம் சிறந்த வாய்ப்பாகும். இணைய குற்றங்களை எதிர்த்து போராடுவதில் உலகளாவிய ஒத்துழைப்பு முக்கியமானது மட்டுமல்ல, தவிர்க்க முடியாத ஒன்றாகும்.ஜி 20 கூட்டங்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டன. சுமார் 200 துறை சார்ந்த கூட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று, இந்திய மக்கள், ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையை பார்த்தனர்.
இது இந்தியாவின் நம்பமுடியாத பன்முகத்தன்மையை உலகிற்கு வழங்குகிறது. இதனால், ஜி20 அமைப்பில், உலகத்திற்கான இந்தியாவின் வார்த்தைகள் மற்றும் கண்ணோட்டம் எதிர்காலத்திற்கான செயல்திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தியாவின் ஜி 20 மாநாட்டின் கருப்பொருளான ‘வசுதைவ குடும்பகம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பது வெறுமனே கோஷம் மட்டுமல்ல. இந்தியாவின் கலாச்சார நெறிமுறைகளிலிருந்து பெறப்பட்ட தத்துவமாகும்.
அனைத்து நாடுகளின் பிரதிநிதித்துவமும் அங்கீகாரமும் இல்லாமல் உலகில் எதிர்காலத்திற்கான எந்தவொரு திட்டமும் வெற்றிகரமாக இருக்க முடியாது என்பதால் , ஜி 20-ன் முழு உறுப்பினராக ஆப்பிரிக்க ஒன்றியத்தை சேர்ப்பதை இந்தியா ஆதரிக்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும். அப்போது ஊழல், ஜாதி மற்றும் மதவாதத்துக்கு இடமில்லை. இவ்வாறு அவர் பேட்டியில் கூறினார்.
*சைபர் குற்றங்கள்
பிரதமர் மோடி மேலும் கூறுகையில், “சைபர் குற்றங்களில் இணைய தளத்தின் மூலம் பிரிவினையை தூண்டுவது, தீவிரவாதத்தை பரப்புவது முக்கியமாக உள்ளது. தீவிரவாதிகள் தங்களது நோக்கத்தை நிறைவேற்றி கொள்ள டார்க்நெட், மெடாவெர்ஸ், கிரிப்டோகரன்சியை பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க வேண்டும்,” என்று கூறினார்.