டெல்லியில் நடக்க உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதார சிக்கல்களை தீர்ப்பதற்காகவும், ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள ஜி20 அமைப்பில் ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளன. சுழற்சி அடிப்படையில் இந்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்தியா தலைமையிலான ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் வரும் 9, 10ம் தேதிகளில் நடக்க உள்ளது.
இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்க வரமாட்டார் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் மாவோ நிங் நேற்று விடுத்த அறிக்கையில், ‘இந்தியா அழைப்பின் பேரில், டெல்லியில் நடக்க உள்ள 18வது ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் லீ கியாங் தலைமையிலான குழு பங்கேற்கும்’ என தெரிவித்துள்ளார். ஜின்பிங் பங்கேற்காததற்கான எந்த காரணத்தையும் மாவோ தெரிவிக்கவில்லை. அதே சமயம், இந்தோனேஷியாவில் வரும் 5 முதல் 8ம் தேதி வரை நடக்கும் ஆசியான் உச்சி மாநாட்டிலும் அதிபர் ஜின்பிங்குக்கு பதிலாக பிரதமர் லீ கியாங் பங்கேற்பார் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஜி20 மாநாட்டில், அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். அதே சமயம் உக்ரைன் விவகாரத்தால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்திய பயணத்தை தவிர்த்துள்ளார். அவருக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
* பைடன் ஏமாற்றம்
டெல்லியில் நடக்க உள்ள ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்பது சந்தேகமாக இருந்த நிலையில், அவர் நிச்சயம் பங்கேற்பார் என அமெரிக்க அதிபர் பைடன் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது ஜின்பிங் வராதது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறித்து வாஷிங்டனில் நேற்று பேட்டி அளித்த பைடன், ‘‘ஏமாற்றமாக உள்ளது. ஆனாலும் சீன அதிபரை நான் சந்தித்தே தீருவேன். டெல்லி ஜி20 மாநாட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’’ என கூறி உள்ளார்.