அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்க துறை கைது செய்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு முன்பு அதிமுகவில் இருந்தவர். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாகப் புகார்கள் கிளம்பின.
இது குறித்து பலரும் புகார் அளித்த நிலையில், இது குறித்து அமல்லாக்க துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தது. இந்தச் சூழலில் தான் கடந்த மே மாதம் முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் முதலில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
செந்தில் பாலாஜி: அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்தது. அப்போது அன்றிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தனர். அப்போது அவருக்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சோதனையில் அவரது இதய குழாயில் நான்கு இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு அவருக்கு அடைப்பை அகற்ற ஆப்ரேஷன் செய்யப்பட்டது. அதன் பிறகு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கும் மருத்துவமனையிலேயே இருந்தார். இதற்கிடையே கடந்த வாரம் அமலாக்கத் துறையினர் அவரை காவலில் எடுத்தனர். புழல் சிறையில் இருந்த அவரை காவலில் எடுத்த அமலாக்கத் துறை சென்னை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தியது. நேற்று தான் அவரது காவல் முடிவடைந்தது. காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், விசாரணை நடத்தக் காவலில் எடுக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறை கோரிக்கையை நிராகரித்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜி சகோதரர் கைது: இது ஒரு புறம் இருக்க அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாகப் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் ஆஜராகாமலேயே இருந்தார். தனக்கு நெஞ்சு வலி இருந்ததாகத் தெரிவித்த அசோக் குமார், நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலமே அனைத்திற்கும் பதில் அளித்து வந்தார். இதையடுத்து அவரை தேடும் நடவடிக்கையில் இறங்கிய அமலாக்கத் துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை இன்று பிற்பகலில் கைது செய்துள்ளது. கேரளா மாநிலம் கொச்சியில் இருந்த அசோக் குமாரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்டமாக அவரை சென்னைக்குக் கொண்டு வரவும் அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.