‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்தவர் ஒரு போலி சாமியார்’ என்று தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு உத்தரப்பிரதேச சாமியார் பரிசுத்தொகை அறிவித்தது தவறு. அப்படி ஒருவரின் தலைக்கு பரிசுத்தொகை நிர்ணயிக்கிறார் என்றால் அவர் சனாதனத்தை பின்பற்றவில்லை என்று அர்த்தம். சனாதனத்தை பின்பற்றுகிறேன், ஒருவரின் தலைக்கு விலை வைப்பேன் என்றால் அவர் ஒரு போலி சாமியாராக தான் இருக்க வேண்டும். இதை வன்மையாக கண்டிப்பது மட்டுமல்ல, இது ஏற்புடையதல்ல. தலைக்கு விலை வைப்பதற்கு யார் அவர்? வெளியூரிலிருந்து வந்து யாருக்கு விலை வைப்பது?
ஒரே நாடு ஒரே தேர்தல் 1952ல் இருந்து 1967 வரை நான்கு முறை நடைபெற்றுள்ளது. இது பாஜவின் கொள்கை முடிவு தான். ஆனாலும் கூட உடனடியாக கொண்டு வர முடியாது. அரசியலமைப்பு அறிஞர்கள் கூட இந்தியாவை பாரத் என்றும், பாரத் என்பதை இந்தியா என்றும் உபயோகிப்பதால் எந்தவித சட்ட சிக்கலும் ஏற்படாது என்று சொல்கிறார்கள். இந்தியாவை பாரத் என்று ஒரு சில இடங்களில் பிரதமர் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு தெரிவித்தார். ‘பாஜ கூட்டணியில் ஓபிஎஸ் சேர்க்கப்படுவாரா?’ என்ற கேள்விக்கு ‘அதிகாரப்பூர்வ கருத்துக்கள் வெளியாகி உள்ள நிலையில் இதுகுறித்து மாநில தலைவராக நான் கருத்துக்கூற எதுவும் இல்லை’ என்றார்.
* அண்ணாமலையின் செருப்புக்கு இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பு: மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
தேனி மாவட்டம், கம்பத்தில் நடைபயணம் முடித்து விட்டு, கடந்த சனிக்கிழமை மதுரை திரும்பும் வழியில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் உள்ள வீர தீயாகிகள் நினைவிடத்திற்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வந்தார். கைரேகை சட்டத்தை எதிர்த்து உயிர் தியாகம் செய்த தியாகிகள் நினைவிடம் மற்றும் அவர்கள் சுடப்பட்ட இடத்தில் மலர் மாலை வைத்து அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பெருங்காமநல்லூர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்கு முன்பாக, துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பிற்கு நின்ற இசட் பிரிவு போலீஸ்காரரின் அருகில் செருப்பை கழற்றி விட்டு சென்றார்.