மணிப்பூருக்காக தீர்மானம் நிறைவேற்றுவதாக காட்டிக்கொள்ளும் ஆளுங்கட்சியின் கோழைத்தனமான முயற்சி இது என்றும், 80 நாட்களாக எதுவும் செய்யாமல் கூட்டத்தொடரின் கடைசி நாட்களில் வடிக்கப்படும் முதலைக்கண்ணீர் என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார் சு.வெங்கடேசன் எம்.பி.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். ஆனால், பிரதமர் மோடி அவைக்கு வந்து பதில் அளிக்காத நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர்.
50க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததால், அதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். இதன் மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்றும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது காரசாரமான விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பதில் அளித்து உரையாற்றினார். அதனை தொடர்ந்து, மணிப்பூரில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க கோரி மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றக் கேட்டுக்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்தில் இருக்கும் போது, மணிப்பூருக்காக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதாக காட்டிக்கொள்ளும் ஆளுங்கட்சியின் கோழைத்தனமான முயற்சி. 80 நாட்களாக எதுவும் செய்யாமல் கூட்டத்தொடரின் கடைசிநாட்களில் வடிக்கப்படும் முதலைக்கண்ணீர்.” என விமர்சித்துள்ளார்.