வாஷிங்டன்: நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியதில் தென் துருவ பகுதியில் 10 மீட்டர் அகலத்தில் பள்ளம் ஏற்படுத்திய படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நிலவில் நிரந்தரமாக நிழலாக காணப்படும் துருவ பள்ளங்களில் நீர் இருக்கலாம். பாறைகளில் உறைந்த நீரை எதிர்கால ஆராய்ச்சியாளர்கள் காற்று மற்றும் ராக்கெட் எரிபொருளாக மாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புவதால் சந்திரனின் தென்துருவம் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த 14ம் தேதி விண்ணில் ஏவியது.
இதே போல், ரஷ்யாவும் கடந்த 1976ம் ஆண்டுக்கு பிறகு, 47 ஆண்டுகளுக்கு பிறகு, நிலவை ஆய்வு செய்ய சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் லூனா-25 விண்கலத்தை வாஸ்டோக்னி ஏவுதளத்தில் இருந்து கடந்த 11ம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்கள், எரிபொருள், ஆக்சிஜன், குடிநீர் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரஷ்யாவின் ஆளில்லா ரோபோ லேண்டர் நிலவில் மோதி நொறுங்கியதாக அறிவிக்கப்பட்டது. கட்டுப்பாடற்ற சுற்றுவட்டப்பாதையில் சுழன்றதாலும் தரையிறங்குவதற்கு முந்தைய சுற்றுப்பாதைக்கு தயாராகும் போது விண்கலத்துடனான தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்தது. இதனிடையே ரஷ்யா அனுப்பிய லூனா 25 நிலவின் மேற்பரப்பில் விழுந்து 10 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை உருவாக்கியுள்ளது. இதனை நாசா அனுப்பிய நிலவின் மேற்பரப்பு ஆர்பிட்டர், புகைப்படம் எடுத்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்ப்பிட்டர் கடந்த 2009 ஜூன் மாதம் 18ம் தேதி முதல் நிலவு ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இது 2025ம் ஆண்டு வரை செயல்பட உள்ளது.
இந்த ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்றுவட்டபாதையில் வலம் வந்து நிலவின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்து நாசாவுக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் நிலவின் ஒருபகுதியில் கடந்த 2022 ஜூன் மாதம் இந்த ஆர்ப்பிட்டர் புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தது. தற்போது அந்த இடத்தை மீண்டும் புகைப்படம் எடுத்து அனுப்பியது. அதில் புதிதாக பள்ளம் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பள்ளம் என்பது ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்தததால் உருவாகி இருக்கலாம் என நாசா நம்புகிறது.