புதுடெல்லி: மினி நாடாளுமன்ற தேர்தல் என்று அழைக்கப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நேற்று ஆலோசனை நடத்தினார். விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அங்கு நவம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக இந்தாண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜவும், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் காங்கிரசும், தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மிசோரத்தில் தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருகின்றன. 5 மாநில தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுக்கு அரையிறுதியாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த 5 மாநில தேர்தல் மினி நாடாளுமன்ற தேர்தல் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் 5 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இதுதொடர்பாக அந்தந்த மாநிலங்களின் தேர்தல் கமிஷன் சார்பில் ஆய்வு பணிகள் நடத்தப்பட்டன. மேலும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய குழுவினர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நேரடியாக சென்று தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட்டனர். கடைசியாக தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் ஆணையர்களின் நேரடி ஆய்வு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனால் 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் காவல் மற்றும் பொது செலவின தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான வியூகங்களை வகுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்து நேற்று 5 மாநில போலீஸ் அதிகாரிகள், பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் காலை 10.15 மணிக்கு கூட்டம் துவங்கியது. 5 மாநில காவல் துறை அதிகாரிகள், பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் தேர்தல் விதிகளை நடைமுறைப்படுத்துவது, செலவுகளை கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் 5 மாநிலங்களிலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. இருப்பினும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 5 மாநிலங்களுக்கும் அடுத்த சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
* பணபலத்தை கட்டுப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்
ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்னதாக, பணபலம் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அனைத்து மாநில அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார். அவர் மேலும் கூறுகையில்,’ 5 மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு எந்தவித வன்முறையும் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும் பணபலத்தின் அச்சுறுத்தல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் பார்வையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.