சென்னை : ‘நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் நாள்’ என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் உள்ள வீனஸ் எவர்வின் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சென்னை கொளத்தூர் தொகுதியில் இருக்கின்ற இளைஞர்களும், மாணவர்களும் தங்களுடைய திறன்களை மேலும் வளப்படுத்திக் கொண்டு, வேலைவாய்ப்பை பெறவேண்டும் என்கின்ற அந்த நோக்கத்தோடுதான், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்கிற பெயரில் தொடங்கினோம்.
நீட் என்ற கொடுமையான தேர்வுக்கு என்றைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றோமோ, அன்றைக்குதான் நாம் அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தக்கூடிய நாளாக அது அமைந்திடமுடியும். நீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டும் என்ற உறுதியை அனிதா முதல் சமீபத்தில் மறைவெய்திய ஜெகதீஸ்வரன் வரைக்கும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் இன்றைக்கு, 136 மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல, இன்றைக்கு 6வது பேட்ஜில் 359 பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட இருக்கிறது.இந்தப் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். இந்தத் திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு அதாவது செலவை எல்லாம் கூட நாங்கள் செலவினங்களாக பார்க்கவில்லை. எதிர்காலத் தலைமுறைகளின் வளர்ச்சிக்கான முதலீடுகளாக பார்க்கின்றோம்.அந்த வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக உதவித்தொகை கொடுக்கவில்லை;
உரிமையை கொடுக்கிறோம். அதுதான் முக்கியம். அதனால்தான் கலைஞர் மகளிர்க்கு சொத்தில் சம உரிமை அளித்து அவர்களுடைய சுய மரியாதையை காப்பாற்றி இருக்கிறார். இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைப் பொறுத்தவரைக்கும், இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடையப் போகிறார்கள். இப்படி, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் உன்னதமான நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இந்த அரசுக்கு அனைவரும் வழக்கம் போல் நல்ல ஒத்துழைப்பை வழங்குங்கள்.