சென்னை: ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக நீதிமன்றங்களில் தெளிவில்லாத நிலை காணப்பட்டது. இதனையடுத்து, அமலாக்கத்துறை வழக்கில் கைதானதால் அதுதொடர்பான ஜாமீன் மனு மட்டுமல்லாமல், முழு வழக்கையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு ஆவணங்களை அமர்வு நீதிமன்றத்திற்கு உடனடியாக மாற்றவும் உத்தரவிட்டது. இதன்படி அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென்று கோரினார். அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் அருண் குமார் ஆஜராகி, இந்த மனுவுக்கு குறுகிய காலத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, வரும் வெள்ளிக்கிழமைக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.