சொந்த மாநிலத்தில் துணைவேந்தராக இருந்தவரை 2 குழுக்களில் நியமித்தார்
* தமிழக அரசுடன் மோதல் போக்கை தொடர்வதால் பரபரப்பு
* கல்வியாளர்கள் கண்டனம்
சென்னை: தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க அமைக்கப்பட்டுள்ள தேடுதல் மற்றும் தேர்வு குழுவில் யுஜிசி சார்பில் உறுப்பினர்களை சேர்த்து ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். இது மரபை மீறிய செயல் என்றும், ஆளுநரின் சர்வாதிகாரப் போக்கை வெட்டவெளிச்சமாக்கி காட்டுகிறது என்றும் பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகங்களில், இதுவரை துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்காக 3 தேடுதல் குழுக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் இடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மரபு மீறிய கவர்னரின் செயல்பாட்டை காட்டுகிறது என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில், அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஒன்றிய அரசின் தலையீடு அதிக அளவில் இருந்து வருகிறது. நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களையும் குறிப்பாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் தவிர மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களையும் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஒன்றிய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் எதிரொலியாக பல்கலைக்கழக மானியக்குழுவில் சில திருத்தங்களையும் மேற்கொண்டு வருகிறது. அதேநேரத்தில் மாநில அரசுகளின் நிர்வாகத்திலும் ஒன்றிய அரசின் தலையீடு இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆளுநர்களை நியமித்து பல்வேறு குழப்பங்களையும் ஒன்றிய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதற்கு சான்றாக, இதற்கு முன்பு தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாநிலத்தில் பல குழப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். குறிப்பாக, அவருக்கு நெருக்கமான சிலரை தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களாக நியமித்தார்.
அதில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம், சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆளுநருக்கு வேண்டியவர்கள் நியமிக்கப்பட்டனர். இதனால் மாநில அரசு நிர்வாகத்துக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆளுநரால் நியமிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இதையடுத்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணைவேந்தர் சூரப்பா ஆகியோர் பிரச்னையை தவிர்க்க தமிழ்நாட்டில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது தேவையற்ற பரபரப்புகளை ஏற்படுத்தும் வகையில் பேசுவதும், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மசோதாக்களை நிறுத்தி வைப்பது, அரசின் அன்றாட நிர்வாகம் சிறப்பாக செயல்படும் கோப்புகளை நிறுத்தி வைப்பது, பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசுவது போல மாநில அரசை சீண்டி பார்ப்பது என்று பல்வேறு குழப்பங்களுக்கு காரணமாக இருந்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது, சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை அறிவித்துள்ளார்.
அந்த குழுவில் நியமனம் செய்யப்பட்டவர்களால் தமிழக உயர்கல்வி துறையில் ஆளுநர் ரவி தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் கடந்த கால பல்கலைக்கழக வரலாற்றில் இதுபோன்று நேரடியாக பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் எந்த கவர்னரும் தலையிட்டதில்லை, மாநில அரசை மீறி துணைவேந்தர்களை நியமிக்கவும் இல்லை. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்ய ஒரு தேடுதல் குழு அமைத்து, அவர்கள் பரிந்துரைக்கும் 3 பேரில் தகுதியானவர்களை, பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர்தான் தேர்வு செய்து நியமிப்பார். ஆனால் அந்த தேடுதல் குழுக்களில் ஒன்றிய அரசின் தலையீடு பெரும்பாலும் இருக்காது.
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் புதிய ஆளுநராக வந்துள்ள ஆர்.என்.ரவி, துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சார்பில் உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வந்தார். ஆனால், தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் ஆளுநருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், ‘‘ தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் உறுப்பினரை நியமிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. துணைவேந்தர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை பின்பற்றினால் போதும்’’ என்று தெரிவித்து இருந்தது. இதுதொடர்பாக செய்திகளும் வெளியாகின.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, கோவை பாரதியார் பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை அமைக்காமல் இழுத்தடித்து வந்தார். அதனால், பல்கலைக் கழகங்களின் வேந்தர் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் இருப்பதற்கான ஒரு வழிமுறையையும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொள்ளாமல் ஆளுநர் தவிர்த்து வந்தார். அதனால் இன்னும் சில பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழாவே நடக்காமல் இருக்கிறது. வெளிநாடுளுக்கு படிக்கச் சென்ற மாணவ -மாணவியர் பலர் பட்டங்கள் இன்றி படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில்தான், மாநில அரசு அனுப்பி இருந்த கடிதத்தில், தெரிவித்திருந்த கருத்தை ஏற்காமல், கவர்னர் ஆர்.என்.ரவி, தன்னிச்சையாக துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழுவில் இருந்து சிலரை உறுப்பினராக நியமித்துள்ளார். இதுவரை துணைவேந்தர் தேடுதல் குழுவில் 3 உறுப்பினர்களே நியமிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 4வது உறுப்பினராக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் ஒருவரை நியமித்து கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக கிண்டி ராஜ்பவன் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில். அரசு சார்பில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டபுள்யூ.சி.டேவிதார் (ஒருங்கிணைப்பாளர்), பல்கலைக்கழக சிண்டிகேட் சார்பில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.துரைசாமி, பல்கலைக்கழக செனட் சார்பில் சென்னை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகங்களின் முன்னாள் துணைவேந்தர் ஜி.திருவாசகம், பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் சார்பில் பெங்களூரு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.திம்மேகவுடா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில், வேந்தர் சார்பில் பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் சுஷ்மா யாதவ்(ஒருங்கிணைப்பாளர்), அரசு சார்பில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.அலாவுதீன், பல்கலைக்கழக சிண்டிகேட் சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.பத்மநாபன், பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் சார்பில் தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எச்.சி.எஸ்.ரத்தோர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.