நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடையும் என்று கூறினார். நாட்டின் 77வது சுதந்திர தின விழா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொண்டாடப்பட்டது.  

டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று தேசியக் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது: நாட்டின் சுதந்திர போராட்டத்திற்காக தங்களை அர்ப்பணித்த, உயிர் தியாகம் செய்த, பங்கேற்ற அனைவருக்கும் மரியாதை செலுத்தி தலைவணங்குகிறேன். இந்தியா, அடிமை மனப்பான்மையிலிருந்து வெளியேறி, இன்று புதிய நம்பிக்கையுடனும், உறுதியுடனும் முன்னேறி வருகிறது. 

வரலாற்றை நாம் திரும்பி பார்க்கும் போது, அது சில அழியாத தடங்களை விட்டுச் செல்லும். அவற்றின் தாக்கம் பல நூற்றாண்டுகளாக இருக்கும். சில நேரங்களில் அவை சிறிய நிகழ்வாக தோன்றலாம். ஆனால் பல பிரச்னைக்கு அது ஆணிவேராக இருக்கக் கூடும். 2000 ஆண்டுக்கு முன்பு இந்தியா தாக்குதலுக்கு உண்டானது. ஒரு சிறிய பகுதியின் ராஜா தோற்கடிக்கப்பட்டார். ஆனால் அது நம்மை ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்தில் சிக்க வைக்கும் என்று அப்போது யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதன்பின்னர், சுதந்திரத்திற்காக ஒவ்வொரு இந்தியனும் பங்களித்தனர். தேசத்திற்காக உழைக்க இன்றும் அதே போன்ற வாய்ப்பு வந்துள்ளது. சுதந்திரத்தின் அமிர்தகாலத்தில் நாம் வாழ்வது பாக்கியம். இந்த அமிர்த காலத்தில் நாம் எடுக்கும் முடிவுகள், நமது செயல்கள், தியாகங்கள் ஆகியவை அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நம் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய விதியை எழுதப் போகின்றன. 

எனவே, அடுத்த ஆண்டு 75வது குடியரசு தினத்தை இந்தியா கொண்டாடும் நிலையில், நாட்டின் வெற்றிக்கு பங்களிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு இருக்க முடியாது. இந்தியாவின் மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை நமது அனைத்து கனவுகளையும் நிறைவேற்றும் திறனை கொண்டுள்ளது. மற்ற நாடுகள் முதுமை அடைந்து வரும் நிலையில், இந்தியா இளமையாக உள்ளது. உலகிலேயே அதிக இளைஞர்கள் நம்மிடம் தான் உள்ளனர். இது தன்னம்பிக்கை நிறைந்த புதிய இந்தியா. எனவே, 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. பொருளாதாரத்தை வலுப்படுத்தி, மக்களுக்கு அதிகாரம் அளித்து, இந்தியாவை வளர்ந்த 

நாடாக மாற்றுவதே எனது அரசின் குறிக்கோள். 
தேசமே முதலில் என்ற கொள்கையை கொண்டுள்ளதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடையும். இது மோடியின் உத்தரவாதம். இப்போது, நகரங்கள் மட்டுமின்றி சிறிய கிராமங்கள் மற்றும் 2ம் தர நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகின்றனர். நம் தேசத்தில் வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை, இதைத்தான் நாட்டின் இளைஞர்களுக்கு நான் கூறிக் கொள்ள விரும்புவது. 2014ல் நிலையான, வலுவான மற்றும் முழு பெரும்பான்மை அரசை மக்கள் தேர்ந்தெடுத்ததன் மூலம், நிச்சயமற்ற மற்றும் உறுதியற்ற அரசியல் சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 

அதன்பிறகு, சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவற்றின் மூலம் எங்களின் வாக்குறுதி நம்பிக்கையாக மாறியதால், 2019ல் மீண்டும் வாக்களித்தனர். இந்த 9 ஆண்டுகால ஆட்சியில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. உலகின் நண்பனாக இந்தியா அடையாளம் காணப்படுகிறது. இந்தியா எதைச் சாதித்தாலும், அது உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. எனவே, அடுத்த ஆகஸ்ட் 15ம் தேதியும் நாட்டின் சாதனைகள், வெற்றிகள் மற்றும் அரசின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து அதிக தன்னம்பிக்கையுடன் செங்கோட்டையில் இருந்து உங்களிடம் உரையாற்றுவேன். 

ஊழல், வாரிசு அரசியல் மற்றும் திருப்திபடுத்துதல் ஆகிய மூன்றும் நாட்டிற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இந்த தீமைகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும். வளர்ந்த தேசத்தின் கனவை நனவாக்க ஊழலை எந்த வடிவத்திலும் சகித்துக் கொள்ள முடியாது. கரையான்களைப் போலவே, ஊழல் நாட்டின் அமைப்புகளையும் அதன் திறன்களையும் முற்றிலும் வெறுமையாக்கி விடும். ஒவ்வொரு துறையிலும் ஊழலுக்கு எதிராகப் போராடுவது முக்கியம். இந்தப் போராட்டத்தை தொடர்வதே எனது வாழ்நாள் அர்ப்பணிப்பு. நன்னடத்தை, வெளிப்படைத்தன்மை, பாரபட்சமற்ற தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவது நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

‘குடும்ப உறுப்பினர்களே’ 
கடந்த 9 ஆண்டில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில், ‘எனது அன்பான சகோதர, சகோதரிகளே’ என்றோ, ‘அன்பான குடிமக்களே’ என்றோ பேசி உள்ளார். ஆனால் இம்முறை ‘என் அன்பான குடும்ப உறுப்பினர்களே’ என குறிப்பிட்டார். அவரது 90 நிமிட உரையில் சுமார் 50 முறை அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தினார். அவர் பேசுகையில், ‘‘என் குடும்ப உறுப்பினர்களே, நான் உங்களிடமிருந்து வந்திருக்கிறேன், நான் உங்களுக்காக வாழ்கிறேன், நான் உங்களுக்காகவே கனவு காண்கிறேன், உங்களுக்காக கடினமாக உழைக்கிறேன். நீங்கள் எனக்கு பொறுப்பைக் கொடுத்து விட்டீர்கள் என்பதற்காக மட்டும் அதை செய்யவில்லை. நீங்கள் என் குடும்பம், உங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக, உங்கள் வலியை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது, உங்கள் கனவுகளை நசுக்க அனுமதிக்க முடியாது’’ என பேசினார். 

கவனத்தை ஈர்த்த தலைப்பாகை 
கடந்த 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு சுதந்திர தின விழாவிலும் பிரதமர் மோடி வண்ணமயமான தலைப்பாகை அணிவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதே போல இம்முறையும் அவரது தலைப்பாகை பலரின் கவனத்தை ஈர்த்தது. இம்முறை அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பந்தனி தலைப்பாகை அணிந்திருந்தார்.  அதில், மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்து இருந்தன. அரை வெள்ளை நிற குர்தா, பேண்ட் மற்றும் கருப்பு நிற ஓவர் கோட் அணிந்திருந்தார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி மூவர்ண நிற தலைப்பாகை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

காஷ்மீர் சுதந்திர தின விழா 
காஷ்மீரில் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாததால் எந்தவித தடைகளும் விதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு சுதந்திர தின விழாக்களில் கலந்து கொண்டனர். 20 ஆண்டுகளுக்கு பின் பக்சி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். 

பல அடுக்கு பாதுகாப்பு 
செங்கோட்டையில் சுதந்திர தின விழாவையொட்டி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. செங்கோட்டையை சுற்றி 10,000 பாதுகாப்பு படையினர், போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். முக அடையாளம் மற்றும் வீடியோ கண்காணிப்பு வசதிகள் கொண்ட 1,000 கேமராக்கள் கோட்டையின் உள்ளேயும், வெளியிலும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.  விழா முடியும் வரை செங்கோட்டையை சுற்றி வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. ராஜ்கட், ஐடிஓ மற்றும் செங்கோட்டையின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. டிரோன் மட்டுமின்றி பட்டம் பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

90 நிமிடங்கள் உரை 
பிரதமர் மோடி நேற்று 90 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றினார். சரியாக காலை 7:34 மணிக்கு உரையை தொடங்கி 9:03 மணிக்கு நிறைவு செய்தார். கடந்த 10 ஆண்டுகளில் அவர் அதிகபட்சமாக 2016ம் ஆண்டில் 96 நிமிடங்கள் உரையாற்றினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram