நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். நமது மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவதுடன், அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளார் மோடி.
நாடு முழுவதும் 77வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு 10 ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.
இந்த விழாவில் பங்கேற்க, ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த விழாவையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 40 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ட்ரோன்களை வீழ்த்தும் ரேடார்கள், முகத்தை அடையாளம் காணும் சிறப்பம்சங்களுடன் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி டெல்லியின் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகை மூவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இதேபோல, நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களிலும் மூவண்ண விளக்குகள் பொருத்தப்பட்டன. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், மாநிலம் முழுவதும் ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.