அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணை தொடர்பாக 3000 பக்க குற்றப்பத்திரிக்கையை ஒரே வாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறையின் இந்த வேகம் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு வடமாநிலங்களில் எதிர்கட்சிகளை முடக்க அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக ஒரு புகார் உள்ளது. முக்கியமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க, ஆபரேஷன் கமலாவை மேற்கொள்ள பாஜக இந்த மத்திய விசாரணை ஆணையங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் புகார் வைத்து வருகின்றனர்.
கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழவும் இதுவே காரணமாக எதிர்கட்சிகளால் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை, சிபிஐ இரண்டும் தங்கள் பார்வையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்து அவரை சமீபத்தில் கஸ்டடியில் எடுத்தனர்.
5 நாட்கள் விசாரணை செய்துவிட்டு நேற்று முதல்நாள் இரவு செந்தில் பாலாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். இந்த 5 நாள் விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை 3000 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தும் முன்பே இந்த குற்றப்பத்திரிகையில் ஒரு பாதி தயார் செய்யப்பட்டுவிட்டது என்கிறார்கள். அதாவது ரெய்டின் போதே ஒரு பாதி அறிக்கை தயார் செய்யப்பட்டுவிட்டது. அதன்பின் ரெய்டு முடிந்து செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருந்த போது இதேபோல் குற்றப்பத்திரிகையில் இன்னொரு கட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்துதான் அவரிடம் நடத்தப்பட்ட 5 நாள் விசாரணையின் அறிக்கை, விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்வி , பதில்கள் ஆகியவை கோர்ட்டில் எழுதப்பட்டு அவையும் குற்றப்பத்திரிக்கையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவை எல்லாம் சேர்த்துதான் 3000 – 4000 பக்கங்கள் வரை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டு உள்ளது