சமீப காலமாக நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் திமுகவை பாஜக தலைவர்கள் குறி வைத்து தாக்கி பேசி வருவது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இதற்காக பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை கூடுதல் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டன.
இவர்களின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் அந்தமானில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் கலந்து கொண்ட நிலையில் திமுகவை மட்டும் குறிப்பிட்டு தனியாக தாக்கி பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.