லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படு தோல்வி அடைந்தது. மணிப்பூரில் அமைதி திரும்பும். கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை நீடிக்கிறது. மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக அழைத்து வரப்பட்டு கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூர் கலவரத்திற்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இவ்விவகாரத்தில் உள்துறை அமைச்சர் பதிலளிப்பார் என்று ஆளும் தரப்பு கூறிய நிலையில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய முடிவெடுத்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்த பின், தீர்மானத்தின் மீதான விவாதம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும் என லோக்சபாவில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 8ஆம் தேதி முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் லோக்சபாவில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு மூன்றாவது நாள் லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார். லோக்சபாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது பிரதமர் அவையில் இருப்பது மரபு. இதன்படி பிரதமர் மோடி அவைக்கு வந்தார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சில கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து INDIA கூட்டணி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் மீண்டும் அவைக்கு திரும்பினர்.
பிரதமர் மோடி, தனது பதிலுரையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நீண்ட நேரமாக விவாதிக்கமால் இருப்பதைக் கண்டித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவ்வப்போது ‘மணிப்பூர், மணிப்பூர்’ என்று கோஷமிட்டனர். இந்தக் கோஷங்களுக்கு இடையே பிரதமர் மோடி தொடர்ந்து பேசிய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால், அவர்கள் வெளியேறிய பின்பு மணிப்பூர் பற்றிப் பேசினார்.