குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகித்தை ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யவில்லை எனவும், ரெப்போ வட்டி 6.5 சதவீதமாக நீடிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் வீடு, வாகன, தனி நபர் கடன் தவணையில் மாற்றம் இருக்காது. ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்துகிறது. இதில் வட்டி விகிதத்தில் மாற்றம் உட்பட பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த மாதத்துக்கான கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 6.5 சதவீதமாகவே நீடிக்கும். இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நிதிக்கொள்கை சீராய்வு கூட்டத்தில் பங்கேற்ற 6 பேர் செய்ய வேண்டாம் என ஏகமனதாக பரிந்துரை செய்துள்ளனர். 4 வது முறையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குழுவில், வட்டி மாற்றம் நுண்பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை இல்லாததால் பண வீக்கம் அதிகரிப்பதற்கான அபாயங்கள் உள்ளன. எனவே, பண வீக்க விகிதத்தை 4 சதவீதத்துக்குள் கொண்டு வருவதற்கு உரிய கவனம் செலுத்தப்படும்.
பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு இல்லாமல், பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் நீண்டகால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனினும், நடப்பு நிதியாண்டில் பண வீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதுபோல் நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.5 சதவீதமாக இருக்கும். பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை இலக்கை கடைப்பிடிப்பதாக அரசு உறுதியளித்துள்ளது. ரெப்போ வட்டி அடிப்படையில்தான் வங்கிகள் கடன் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன. வட்டி குறைக்கப்படாததால், வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐ குறைய வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* ரூ.12,000 கோடி ரூ.2,000 நோட்டு இன்னமும் வங்கிக்கு வரவில்லை
2016ம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், ரூ.2,000 நோட்டை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதற்காக செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் அக்டோபர் 7 வரை நீட்டிக்கப்பட்டது. இதன்படி, ரூ.2,000 நோட்டை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்வதற்கான கெடு இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், ரூ.3.43 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டது. ரூ.12,000 கோடிக்கான ரூ.2,000 மட்டுமே இன்னமும் வங்கிக்கு வரவில்லை. அதாவது 96 சதவீத நோட்டு திரும்ப வந்து விட்டன என ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்தது.