சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வான 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். அப்போது, அடுத்த 2 ஆண்டுகளில் பல்வேறு அரசு பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக குரூப்-4 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 10,205 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கில் வழங்கி பேசியதாவது: ‘அரையணா காசாக இருந்தாலும் அரசு காசு’ என்று கிராமத்தில் சொல்வார்கள். ஏனென்றால் அரசாங்க வேலைக்கு இருக்கிற மவுசு எந்த காலத்திலும் குறையாது. அரசு நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று எப்படியாவது அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்பது படித்த இளைஞர்களின் பெரிய கனவு. அந்த அடிப்படையில் இன்றைக்கு உங்களின் லட்சிய கனவு நிறைவேறி இருக்கிறது. அதன் அடையாளம்தான் உங்கள் கையில் இருக்கும் பணி நியமன ஆணை. இந்த நொடி உங்களுக்கும், உங்களுடைய அப்பா, அம்மாவுக்கு மகிழ்ச்சி அளிப்பதோடு, அதே மகிழ்ச்சியோடு நானும் நின்று கொண்டிருக்கிறேன். ஒருவருக்கு வேலை கிடைத்தால் ஒட்டுமொத்த குடும்பம் சிறப்பாக இருக்கும்.
அரசாங்கம் தீட்டும் எந்த திட்டமானாலும் மக்களுக்காகத்தான். மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை எந்த குறைவும் இல்லாமல் நீங்கள் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் எல்லோரும் அரசு ஊழியர்கள் ஆகியுள்ளீர்கள். 23ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். மூளை சாவு அடைந்தவர்கள் இறக்கும் முன் உடல் உறுப்புதானம் செய்தால் அரசு மரியாதை அடக்கம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, உடல்உறுப்பு தானம் செய்த முதல் நபர் ஒரு அரசு ஊழியர்தான். அந்த இறுதிச்சடங்கில் அமைச்சர் சுப்பிரமணியன், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவருடைய குடும்பத்தினருக்கு தனிப்பட்ட முறையில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செய்தி, உடல் உறுப்பு பற்றி பெரும் விழிப்புணர்வை நிச்சயம் வெளிப்படுத்தும்.
அரசு சிறப்பாக செயல்பட அரசு ஊழியர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். நமது அரசு இயந்திரத்தை திறம்பட செயல்பட டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ தேர்வு வாரியம், சீருடை பணிகள் தேர்வு வாரியம் ஆகியவைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால் விடைத்தான் திருத்த காலதாமதம் ஆகிறது. இதை சரிசெய்ய, விடைத்தாள்களை மதிப்பீடு செய்கின்ற முறையை எளிதாக்கவும், காலதாமதத்தை தவிர்க்கவும், அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ரூ.95 லட்சம் செலவில், ஆன்-ஸ்கிரீன் எவாலுவேஷன் லேப் என்ற உயர் தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. 20.9.2021 ஒரு குழு அமைத்து ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 74 புதிய பணியிடங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.