இந்தியாவில் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி திமுகவை தாக்கினார். இதனை உண்மை எனக்கூறிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ட்விஸ்ட் வைத்து மத்திய அரசின் கடன் குறித்த விபரத்தை கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் செய்த போது அவரிடம் இருந்த நிதித்துறை பறிக்கப்பட்டு தங்கம் தென்னரசுவிடம் வழங்கப்பட்டது.
பிடிஆருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டது. இவர் நிதித்துறை அமைச்சராக இருந்தபோது நிதி சார்ந்த விஷயங்களில் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். துறை மாற்றத்துக்கு பிறகு அவர் அதிகம் பேசாமல் இருந்தார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக கூறி திமுக அரசை விமர்சனம் செய்திருந்தார். இதுபற்றி நேற்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கடன் மதிப்பீடும் முறை பற்றி விளக்கி நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்தார்.
இதுபற்றி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ‛‛உற்பத்தி திறனை வைத்து தான் கடனை மதிப்பிட வேண்டும். கடன் வாங்குவதில் இரண்டாவது இடத்தில் தான் நாம் இருந்தோம். ஆனால் 2014 முதல் 2021 வரையிலான ஆட்சி இல்லாமல் இருந்திருந்தால் இப்போதும் நாமும் கடன் வாங்குவதில் இரண்டாவது இடத்தில் தான் இருந்திருப்போம். நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் சொன்ன தகவல் சரி. கடன் அளவு மாநிலத்தின் உற்பத்திக்கு ஏற்ப தான் இருக்கும். நிர்மலா சீதாராமன் சொன்ன நம்பரில் தவறில்லை. மகாராஷ்டிரா மட்டும் தான் தமிழகத்தை விட உற்பத்தி அதிகம் உள்ள மாநிலம். அவர்களுக்கு கடன் குறைவாக இருக்கிறது என்றால் அவர்கள் நிதியை சிறப்பாக கையாள்கிறார்கள். தமிழகத்தில் யார் ஆட்சியாலோ பொருளாதாரத்தில் மோசமான சூழ்நிலை ஏற்பட்டு 27 சதவீத கடன் இப்போது நமக்கு இருக்கிறது.