சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் தாறுமாறான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் முதல் நாளில் இருந்தே ஜெயிலர் படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்து வருகிறதாம். இந்நிலையில் இரண்டே நாளில் ஜெயிலர் படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி – நெல்சன் காம்போவில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது
பேட்ட, தர்பார், அண்ணாத்த என ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் எதுவும் பெரிதாக ஹிட் ஆகவில்லை. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் வழக்கம்போல நல்ல ஓபனிங் கிடைத்தது. இதனால் ரஜினிக்கு கம்பேக் கொடுக்கும் படமாக ஜெயிலர் இருக்குமா என அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. மேலும், FDFS எனப்படும் அதிகாலை காட்சியும் இல்லாததால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்தும் சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், ஜெயிலர் படத்திற்கு முதல் நாளில் இருந்தே தரமான ஓபனிங் கிடைத்துள்ளது. ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ஜெயிலர் சம்பவம் செய்துள்ளது. ஏற்கனவே முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் புக்கிங் ஆகிவிட்டன. இதனால் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 24 கோடி ரூபாய் வசூல் செய்த ஜெயிலர், இந்தியா முழுவதும் 49 கோடி வரை கலெக்ஷன் செய்ததாக சொல்லப்படுகிறது.