மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான முதல் நாள் விவாதம் அனல் பறந்த நிலையில் இன்று 2வது நாள் விவாதம் நடைபெறுகிறது.
மணிப்பூரில் குக்கி இன பழங்குடி மக்கள் மெய்தி இனத்தவரால் கொடூரமாக கொல்லப்பட்டும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரங்கள் உலக அரங்கையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. குறிப்பாக பெண்களை நிர்வாண ஊர்வலமாக அழைத்து சென்று கும்பல் பலாத்காரம் செய்த வீடியோ வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இதுபற்றி பேச வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி மக்களவையில் இதுகுறித்து பேசாத நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர்.
50 உறுப்பினர்கள் ஆதரவு இருந்ததால் சபாநாயகரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சம்மதம் தெரிவித்தார். நேற்று மக்களவையில் அதன் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்றது. ராகுல் காந்தி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகாய் விவாதத்தை தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்தை கடுமையாக விமர்சித்த அவர், இதுபற்றி பிரதமர் பேச வலியுறுத்தினார். பாஜக தரப்பில் நிஷிகாந்த் துபே விவாதத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் சவுகதா ராய், டிஆர் பாலு, திருமாவளவன் உட்பட பலர் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரை நிகழ்த்தினார்கள். குறிப்பாக மணிப்பூர் விவகாரம் மட்டுமின்றி, விலைவாசி உயர்வு, வேலையிழப்பு உட்பட பல்வேறு விவகாரங்களை விவாதத்தின்போது எழுப்பி மத்திய பாஜக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைத்தனர். நேற்றைய முதல் நாள் விவாதம் மட்டும் சுமார் 6 மணி நேரம் அனல் பறக்க நடைபெற்றது.