மதுரையில் 20ம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் இதுவரை எந்த ஒரு மாநாடும் நடைபெறவில்லை
இதனிடையே திருச்சியில் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை அழைத்து மாநாடு நடத்தினார். இந்நிலையில் கொங்குமண்டலத்தை தாண்டி மதுரையிலும் பெரும் செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக மாநாடு நடைபெறும் என அறிவித்தார். வரும் 20ம் தேதி மதுரை விமான நிலையம் அமைந்துள்ள பெருங்குடி பகுதியில் அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
ஏனெனில் ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் என்பதால், முக்குலத்தோர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் தென் மாவட்டங்களின் முக்கிய நகரமான மதுரையில் தனது செல்வாக்கை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமி இந்த மாநாட்டை அறிவித்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. மதுரை மாநாட்டுக்கு செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா,உதயகுமார் ஆகியோர் பிரம்மாண்டமாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காவல்துறையில் அதிமுக அனுமதியும் வாங்கிவிட்டது. இந்நிலையில் மதுரை அதிமுக மாநாடு நடக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு முக்கிய காரணம் என்பது மதுரையில் 20ம் தேதி நடக்கும் அதிமுக மாநாட்டுக்கு தடைக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.